வெலிசறை கடற்படை முகாமிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள தமது வீடுகளுக்கு வருகை தந்த நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொவிட் - 19 வைரஸ் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட நாவலப்பிட்டி அளுத்கம மற்றும் கொங்தென்ன ஆகிய பகுதிகளிலேயே இவர்களின் வீடுகள் அமைந்துள்ளன.
வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, இருவரையும் நோயாளர் காவுவண்டி மூலம் நேற்றிரவே (26.04.2020) வெலிசறை கடற்படை முகாமுக்கு அனுப்பி வைப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஏப்ரல் 18 ஆம் திகதி ஒருவரும், 21 ஆம் திகதி மற்றையவரும் வெலிசறை கடற்படை முகாமில் இருந்து தமது வீடுகளுக்கு விடுமுறையில் வந்துள்ளனர்.
குறித்த முகாமில் உள்ள கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா பரவியமை கண்டறியப்பட்டதையடுத்து, பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரம் இவர்கள் இருவரும், அவர்களின் குடும்பத்தாரும், தொடர்பை பேணியவர்களும் வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கடற்படை வீரர்கள் இருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.
அதேவேளை, கம்பளை - சிங்கஹாபிட்டிய பகுதியிலும் விடுமுறையில் வந்திருந்த கடற்படை வீரரொருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றிரவே அவரும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தாரும், தொடர்பை ஏற்படுத்தியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment