‘கிம் ஜாங் உன்’ ஒரு ரிசார்ட் நகரில் நலமாக உள்ளார் : தென்கொரியா
வடகொரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள வான்சன் நகரில் கிம் ஜாங் உன் நலமுடன் இருக்கிறார். அப்படியென்றால் அவர் இறந்ததாக வரும் செய்திகள் என்னாயின. பார்ப்போம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வலுத்து வந்த நிலையில், அவர் உயிருடனும் நலமுடனும் ரிசார்ட்டில் இருப்பதாகத் தென்கொரிய அதிபரின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென் கொரிய அதிபர் ‘மூன் ஜே-இன்’னின் சிறப்பு ஆலோசகரான ‘மூன் ச்சங்-இன்’ சி.என்.என். நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது இப்படித் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதிக்குப் பிறகு கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்கவில்லை. ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த அவரது தாத்தாவின் பிறந்தநாள் விழாவிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. தாத்தாவின் பிறந்தநாள், வடகொரியாவின் அரசாங்க நாட்காட்டியில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி வெளிப்படையாகத் தெரியும்படியான இவரது இல்லாமை, மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்களையும் சமூக வலைதளங்களில் ஏராளமான யூகங்களையும் கிளப்பியுள்ளது. ஆனால், கிம் ஜாங் உன் உயிருடனும், நலமுடனும் உள்ளார். வடகொரியா கிழக்குப் பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான வான்சன் நகரில் அவர் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார் என்றும் அவர் (தென்கொரிய அதிகாரி) தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, அதே வான்சன் நகரத்தில் கிம் ஜாங் உன்னுக்கு சொந்தமான ரயில் ஒன்று நிற்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை படத்துடன் செய்தி வெளியிட்டது.
சொந்த ரயிலில் உல்லாச நகருக்கு சென்றாரா கிம் ஜாங் உன்?
இந்த ரயில் கிம் ஜாங் உன்னுக்கு சொந்தமான ரயில் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இது முழுமையாக நிரூபிக்கப்படாத செய்தி என்றாலும் தற்போதைய தென்கொரிய அதிகாரியின் கருத்து இந்தச் செய்திக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இருக்கிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழப்பு குறித்து தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் உயிரோடு இருப்பதாகவும் நலமோடு ஒரு கேளிக்கை நகரில் இருப்பதாகவும் வெளியாகி வரும் தகவல்களால் மேலும் மேலும் குழப்பம் அதிகரித்திருக்கிறது.
Comments
Post a Comment