கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முப்படைகள் மூலம் வானில் இருந்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நாளை முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு 2 வாரங்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மறுபுறம் கொரோனா பாதித்த நோயாளிகளை குணமாக்க மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் மருத்துவர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருவது சோகத்தை ஏற்படுத்துகிறது. தற்போது வரை ஏராளமான மருத்துவர்களும் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இத்தகைய கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு முப்படைகள் சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு முப்படை தளபதி பிபின் ராவத் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் மேலே இந்திய விமானப்படை விமானங்கள் சீறிப் பாய்ந்து சென்றன. சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியில் மேலே இரண்டு ஐ.ஏ.எஃப் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் பறந்து சென்றன. இவை ஸ்ரீநகரில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை பறந்து கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தின் மீது இந்திய விமானப்படை விமானங்கள் மலர் தூவி மரியாதை செலுத்தின. இது காவல்துறையினரின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்தன.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு இந்திய ராணுவத்தின் இசைக் குழுவினர் தங்கள் வாசிப்பின் மூலம் கொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

கோவா மாநிலம் பனாஜியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீது இந்திய ராணுவத்தின் விமானங்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

டெல்லி ராஜ்பாத் மீது ராணுவத்தின் பல்வேறு போர் விமானங்கள் பறந்து சென்று கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மும்பை நகரின் வான் பகுதியில் ஐ.ஏ.எஃப் சு-30 விமானங்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீறிப் பாய்ந்தன. இது பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. மருத்துவர்களையும் பெருமைப்பட வைத்தது.

லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மீது இந்திய ராணுவத்தின் போர் விமானங்கள் மலர் தூவி மரியாதை செலுத்திச் சென்றன.

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மீது மலர் தூவி ராணுவ ஹெலிகாப்டர்கள் மரியாதை செலுத்தின.

பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனை மீது மலர் தூவி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மரியாதை செலுத்தின. இதனை கோவிட்-19 வைரஸிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

Comments

Popular posts from this blog

புள்ளி முறை அறிமுகம்... வீதி தவறுகளால் சாரதி அனுமதிப்பத்திரத்தை இழக்க நேரிடும்.

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி.

நாட்டினுள் சமூகத்தில் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை.