ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை.
சமூகத்தில் கொரோனா நோயாளர்கள் இல்லை
ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் இருந்து கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த 7 வாரங்களில் நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் இல்லாமற்போயுள்ளது என அர்த்தப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே, சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்தும் பின்பற்றுதல் அவசியம் என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் நேற்று (25) அடையாளங்காணப்பட்டனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர், கட்டாரில் இருந்து திரும்பிய அறுவர், அல்பேனியாவில் இருந்து வருகை தந்த கப்பல் ஊழியர் மற்றும் யுக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மூவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 3,345 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்குள்ளாகிய 3,158 பேர் குணமடைந்துள்ளதுடன் 174 தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Post a Comment