2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பிப்பது கடினம் என்றால் போட்டிகளை கைவிடுவது தவிர வேறு வழி இல்லை என போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோயிரோ மோரி அளித்துள்ள பேட்டியில் முன்னதாக போர் காரணங்களால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் இரத்தாகியுள்ளன. தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராட வேண்டியுள்ளது. 2021 க்குள் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால், அதன் பிறகு 2022 க்கு போட்டியை ஒத்தி வைக்க முடியாது. அப்படி நடந்தால் ஒலிம்பிக் போட்டியை இரத்து செய்ய அதக வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நீடித்தால் ஆபத்து அதிகமாகம் என்றார். ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் திகதி முதல் ஒகஸ்டு 9 ஆம் திகதி வரை நடத்த முன்னதாக உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2021 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.